Monday, October 10, 2011

World Postal Week - Dinamalar news


நாம் இன்று இ-மெயில், இன்டர்நெட், பேக்ஸ், மொபைல் போன் என்று நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்கிறோம். இதனால் இன்றைய சந்ததியினருக்கு தபால் துறையின் முக்கியத்துவம் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிராமம், நகரம் என வித்தியாசமின்றி இந்தியாவை, மக்களின் கலாசாரத்தை
ஒருங்கிணைக்கும் பணியை தபால்துறை செய்கிறது. பொது மக்களிடம் கடிதம் எழுதும் பழக்கம் இ-மெயில் வரவால் குறைந்திருந்தாலும், தபால் வழியாக அனுப்பப்படும் அலுவல் ரீதியான கடிதங்கள் உள்ளிட்டவற்றை, கொண்டு சேர்க்கும் பொறுப்பு, இன்றும் தபால் துறை வசமே உள்ளது. தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், தபால் துறையின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டு தோறும் அக்., 10ம் தேதி தேசிய தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பரிணாமம் : பழங்காலத்தில் புறாவின் கால்களில் கடிதத்தை கட்டி தகவல்கள் அனுப்பப்பட்டன. மன்னர்கள் ஆட்சியின் போது ஒற்றர்கள் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டன. தபால் துறை உருவாக்கப்பட்ட பின், கடிதங்கள் தபால் துறை மூலமாக உலகம் முழுவதும் பரிமாறப்படுகின்றன.

முதல் இடம் : இந்திய தபால் துறை 1764ல் துவக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கு 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம், கிராமங்களில் உள்ளன. 12 ஆயிரம் தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.

மாற்றம் தேவை : ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால்,விரைவு தபால், இ- போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் மற்றும் சேமிப்பு கணக்குகள் போன்ற பணிகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது. தற்போது மொபைல் போன்களின் வரவால் தபால் துறைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப மாற்றங்களை தபால் துறையில் விரைவாக புகுத்த வேண்டும்.

Courtesy : Dinamalar Dt. 10.10.11

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane