Monday, June 29, 2015

Chennai Metro now in track



சென்னை மக்களின் நீண்டகால கனவான, மெட்ரோ ரயில் போக்குவரத்து இன்று துவங்கியது. முதல்வர் ஜெ., வீடியோகான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார். மாநகரின், 376 ஆண்டுகால வரலாற்றில், மற்றொரு புதுமையாக இந்த சேவை அமைகிறது.

தமிழக தலைநகரான சென்னை, பல்வேறு சிறப்புக்களை கொண்டது. இந்திய ரயில் போக்குவரத்தின் பிறப்பிடமே சென்னை நகரம் தான். 'டிராம்' வண்டியில் துவங்கி, மேம்பால ரயில் சேவை வரை, காலத்திற்கேற்ப பல்வேறு வசதிகள் கொண்டு வரப்பட்டன.



'குளுகுளு' வசதியுடன்...:

இந்த வகையில், நகரின், 376 ஆண்டுகால வரலாற்றில், மற்றொரு புதுமையாக, மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான, 'குளுகுளு' வசதியுடன் கூடிய, மெட்ரோ ரயில் போக்குவரத்து
இன்று துவங்குகிறது. பணத்தை வழங்கினால் டிக்கெட் தரும் இயந்திரம்; ஏறி நின்றால் நகரும் படிக்கட்டு; அனைத்து பெட்டிகளிலும், குளு குளு 'ஏசி' என, தமிழக ரயில் பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தை, இன்று முதல் தரப்போகிறது, மெட்ரோ ரயில் பயணம். ஆலந்துார் - கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவையை, இன்று மதியம், 12:00 மணிக்கு, சென்னை தலைமை


செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். அத்துடன், கோயம்பேடு, மெட்ரோ ரயில் பணிமனையையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சல், அரசு முதன்மை செயலர் (திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை) கிருஷ்ணன், அரசு தலைமை செயலர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



விழாக்கோலம்:

மெட்ரோ ரயில் சேவை துவக்கம் குறித்து, அறிவிப்பு வெளியானதை அடுத்து, 100க்கும் மேற்பட்ட, மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், நேற்று ஆலந்துார் விரைந்தனர்; விழா ஏற்பாடுகளை
முடுக்கி விட்டனர். அத்துடன், ஆலந்துார், கோயம்பேடு தவிர, இடையேயுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில், கட்டுப்பாட்டு அறை, சென்சார் வழி, பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் பணி போன்றவற்றை, இறுதிக்கட்டமாக சரிபார்க்கும் பணியையும், ஊழியர்கள் மேற்கொண்டனர்.
அனைத்து ரயில் நிலையங்களும், பளிச்சென தெரியும் வகையில், வண்ணம் பூசும் இறுதிக்கட்ட பணியும் நடந்தது. ரயில் நிலையங்கள் அனைத்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டது. நுாறடி சாலையில், இரவில், மெட்ரோ ரயில் நிலையங்கள் மின்
விளக்குகளில் ஜொலித்தன. மெட்ரோ ரயில் சேவை இன்று துவங்குவது, சென்னை மக்கள்
இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



முதற்கட்டம் தான் :

சென்னையில், 14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மெட்ரோ ரயில் சேவைக்கு, 2009 ஜூனில் அடிக்கல் நாட்டப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டை - விமான நிலையம்; சென்ட்ரல் - பரங்கிமலை ஆகிய இரு வழித்தடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோயம்பேடு - ஆலந்துார் இடையே,

முதற்கட்டமாக, 10 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை வழித்தட பணி முடிக்கப்பட்டு, 2013 நவம்பர், 6ம் தேதி முதல்வர் ஜெயலலிதா சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்தார். பாதுகாப்பு ஆய்வும் முடிக்கப்பட்டு, வழித்தடம் தயாரானது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் துவக்க தேதி தள்ளிப் போனது. இடைத்தேர்தல் முடிந்துள்ள நிலையில், மெட்ரோ ரயில் சேவையை துவக்க அனுமதி கிடைத்ததால், இன்று சேவை துவங்கியது.
மெட்ரோ ரயில் டிக்கெட் எவ்வளவு ? சென்னையில் இன்று துவங்கிய மெட்ரோ ரயில் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம்; ரூ. 40 , குறைந்தது ரூ. 10 . கட்டண விவரம் வருமாறு: ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை ரூ. 40. ஆலந்தூர் முதல் அரும்பாக்கம் வரை ரூ. 40 , ஆலந்தூர் முதல் - அசோக் நகர் வரை ரூ. 20 , ஆலந்தூர் முதல்-வட பழநி வரை ரூ. 30 , ஆலந்தூர் முதல் ஈக்காட்டுத்தாங்கல் வரை ரூ. 10. சிறப்பு வகுப்பு கட்டணம் சாதாரணத்தில் இருந்து 2 மடங்காக வசூலிக்கப்படும். இலவச பயணம் இந்த ரயிலில் கிடையாது. இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முதல் ரயில்,ஆலந்துாரில் புறப்பட்டு கோயம்பேடு செல்கிறது. தொடர்ந்து, பயணிகளுக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, 2,000 கி.மீ., வரை சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு, முதற்கட்ட சேவைக்கு, 12 ரயில்கள் தயாராக உள்ளன. குறைந்தபட்ச கட்டணம், 10 ரூபாயாக இருக்கும். இதையடுத்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில், ஆலந்துார் - பரங்கிமலை; சைதாப்பேட்டை - விமான நிலையம் இடையேயான சேவையை எதிர்பார்க்கலாம்.

ரயில் நிலையமும், வசதிகளும்...:

* கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காடுத் தாங்கல், ஆலந்துார் ஆகிய ஏழு இடங்களில், மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன.
* மூன்று தளங்களை கொண்ட, ரயில் நிலைய தரைதளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம்,
படிக்கட்டு, நகரும் படிக்கட்டு, லிப்ட்,
ஏ.டி.எம்., வசதிகளும் உள்ளன.
*முதல் தளத்தில் பயணிகள் பயணச்சீட்டு பெறும் அறை, பயணிகள் சேவை மையம், பயணிகளை அனுமதிக்கும் சென்சார் வழி, ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைகள் உள்ளன.
*இரண்டாவது தளத்தில் இருந்து தான் பயணிகள், ரயிலில் பயணிக்க முடியும். இந்த தளத்தில், நடைமேடை, பயணிகளுக்கான கழிப்பறை வசதிகள் உள்ளன.
*மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதியாக, சரிவு பாதையும், மின்துாக்கி வசதியும்
செய்யப்பட்டுள்ளது.

பயணச் சீட்டு பெறுவது எப்படி?

* அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. பணம் செலுத்தி, செல்லும் இடம், எத்தனை பயணச்சீட்டு
என்பதை தேர்வு செய்து, டோக்கன் பெறலாம்; பயணச்சீட்டு வழங்கும் மையத்திலும் டோக்கனை பெறலாம்.
*மெட்ரோ ரயில் நிர்வாகம் தரும் பயண அட்டையைக் கொண்டும், பயணிக்கலாம். சில மாதங்களில், பயணத்திற்கான வங்கி அட்டையும் வழங்கப்பட உள்ளது.


- நமது நிருபர் -

Source : Dinamalar Dt. 29.6.2015.

For Videos : 



சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளில் முதல் கட்டமாக கோயம்பேடு–ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, சரியாக பகல் 12.16 மணிக்கு ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி புறப்பட்ட முதல் மெட்ரோ ரெயிலை சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பிரீத்தி என்பவர் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் ஏற்கனவே செய்துவந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான ஓட்டுனர் வேலைக்கு இவர் மனு செய்தார். அதிர்ஷ்டவசமாக இந்த பணிக்கான ஒரே பெண்ணாக பிரீத்தி தேர்வானார்.
பின்னர், இதற்கான தனிப் பயிற்சிகளை நிறைவு செய்து, சென்னையின் முதல் மெட்ரோ ரெயிலை இயக்கியவர் என்ற சிறப்பிடத்தை இவர் பிடித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளோமா பட்டம் பெற்றவர் பிரீத்தி, என்பது குறிப்படத்தக்கது.

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane