இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 1999ல் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இருப்பினும் 500க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். இவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், கார்கில் நினைவு தினம் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் கரடுமுரடான 18000 அடி உயர சிகரங்களை கொண்ட கார்கிலில் சாதாரண சூழ்நிலையிலேயே தாக்கு பிடிப்பது கடினம். குளிர் காலத்தில் வெப்பநிலை மைனசுக்கும் கீழ் இறங்கிவிடும். இரு நாட்டு வீரர்களும், செப்., 15ம் தேதி முதல் ஏப். 15ம் தேதி வரை பழைய ஒப்பந்தப்படி, கார்கில் சிகரங்களிலிருந்து பின்வாங்குவர். ஏப்ரல் பிற்பகுதியில் மீண்டும் பாதுகாப்பு பணியை தொடர்வர்.
பாகிஸ்தான் சதி: 1999 ஏப்ரலில் கார்கில் சென்ற இந்திய ராணுவத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீர் பயங்கரவாதிகளுடன் கை கோர்த்துக்கொண்டு இந்திய பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. 5 ஆயிரம் பேர் எல்லை தாண்டி இந்திய நிலைகளுக்குள் ஊடுருவி இருந்தனர். இது திடீரென நடந்த ஊடுருவல் அல்ல, பாகிஸ்தானால் திட்டமிடப்பட்ட "ஆபரேஷன் பாதர்' என்ற பெயரில் நடந்த அத்துமீறல் இது. பாகிஸ்தானின் சதியை முறியடிக்க, "ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999 மே 26ம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.
விமான தாக்குதல்: கார்கில் பகுதி முழுவதும் மலை பிரதேசம் என்பதால் எங்கெல்லாம் ராணுவ முகாம் இல்லையோ, அங்கெல்லாம் பாகிஸ்தானிய ராணுவத்தினர் உட்புக ஆரம்பித்தனர். இவர்கள் மலை உச்சியில் இருந்ததால்... கீழிருந்து நமது ராணுவத்தினர் தாக்குவது சிரமமாக இருந்தது. எனவே, மே 26ம் தேதி விமான தாக்குதல் துவங்கியது. இதன் படி ஸ்ரீநகர் விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
ராணுவ வீரர்கள் தியாகம்: தொடர்ந்து போர் நடந்து வர.... எல்லை பகுதியில் போர் வீரர்களை சந்தித்து ஊக்கம் தர அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஜூன் 13ம் தேதி கார்கில் சென்றார். அவர் பேச இருந்த இடத்தில் பீரங்கி தாக்குதல் நடந்தது. அவர் உயிர் தப்பினார். இந்திய வீரர்களின் அதிரடி தாக்குதல் தொடர்ந்தது. 66 நாட்கள் நடந்த இப்போர் 1999 ஜூலை 26ல் முடிவுக்கு வந்தது. இந்திய ராணுவ வீரர்கள், இன்னுயிரை தியாகம் செய்து பெற்ற இந்த வெற்றியை இந்நாளில் நினைவு கூர்வோம்
Source : Dinamalar Dt. 26.07.12
No comments:
Post a Comment