Thursday, August 11, 2011

Sale of Gold coins in Coimbatore..

 தபால் அலுவலகத்தில் தங்கம் விற்பனை அதிகரிப்பு!

கோவை : மத்திய அரசு உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தபால் அலுவலகங்களில் தங்க நாணயங்கள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளன. தபால் அலுவலகங்களில் தங்க நாணயம் விற்பனை செய்யும் திட்டம், சில ஆண்டுக்கு முன் மத்திய அரசால் துவங்கப்பட்டது. இதன்படி, அரை கிராம், ஒரு கிராம், ஐந்து கிராம், எட்டு கிராம் எடை கொண்ட, 24 காரட் தங்க நாணயங்கள், நாடு முழுவதும் உள்ள, 630 தலைமை தபால் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. "இந்தியா போஸ்ட்' சின்னத்துடன் உருவாக்கப்பட்ட இந்த நாணயங்கள், 99.9 சதவீதம் தூய்மையான தங்கத்தில் செய்யப்பட்டவை. சுவிட்சர்லாந்தில் செய்யப்பட்ட இந்த நாணயங்கள், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ், சிறப்பான பேக்கேஜிங் உடன், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. தபால் அலுவலகத்தில், பத்து கிராம் தங்க நாணயம் வாங்கினால், அரை கிராம் நாணயம் இலவசம். அரசு ஊழியர்களுக்கு ஆறு சதவீதம் தள்ளுபடி உண்டு. இந்த இரு சலுகைகளில் ஏதேனும் ஒன்றை அரசு ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தபால் அலுவலகத்தில், தங்க நாணயங்களின் விலை, அன்றைய மார்க்கெட் நிலவரத்துக்கு தகுந்தபடி நிர்ணயிக்கப்படுகிறது. எனினும், "இந்த விலையானது, மார்க்கெட் விலையை காட்டிலும் குறைவானது தான்' என்கின்றனர், தபால் அதிகாரிகள்.
"நகைக் கடைகளில் கிடைக்கும் தங்கத்தை விட, தபால் அலுவலகங்களில் கிடைக்கும் தங்கம், சுத்தமானதாக இருக்கும். அரசு உத்தரவாதம் வேறு இருக்கிறது' என்று எண்ணி, பலர் இங்கு விரும்பி தங்கம் வாங்குகின்றனர். இதனால், தபால் அலுவலகங்களில் தங்க நாணயம் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், கோவை கோட்டத்தில் மட்டும், 11 ஆயிரத்து 742 கிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், ஆர்.எஸ்.,புரத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் மட்டும், 4,204 கிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அகில இந்திய அளவில், அதிகப்படியான தங்கம் விற்ற தபால் அலுவலகங்களின் பட்டியலில், ஆர்.எஸ்.,புரம் தலைமை தபால் அலுவலகம், இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் கோவை கோட்டத்தில், 800 கிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
"தங்கம் விலை, கடந்த ஓராண்டில் தாறுமாறாக உயர்ந்து, தினம் ஒரு உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. இது எங்கு போய் முடியுமோ என்ற எண்ணத்திலேயே பலரும், தங்கத்தை வாங்கத் துவங்கியுள்ளனர். அதன் விளைவாக, நகைக்கடைகளிலும் விற்பனை அதிகரிக்கிறது; அதற்கேற்றபடி, தபால் அலுவலகத்திலும் விற்பனை அதிகரித்துள்ளது' என்கின்றனர், அதிகாரிகள்.

Source : Dinamalar Dt. 11.08.11

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane