Friday, April 16, 2010

India Post News


சென்னை:தபால் நிலையங்களுக்கிடையே இணைப்பு வசதியை இன்னும் ஒரு ஆண்டுக்குள் கொண்டு வரப்படும்,'' என சென்னை மண்டல தலைமை தபால் துறை தலைவர் ராமானுஜன் தெரிவித்தார்.தேசிய சிறுசேமிப்பு இன்ஸ்டிடியூட் மற்றும் தமிழக அரசின் சிறுசேமிப்புத் துறை சார்பில், மகளிர் சிறுசேமிப்பு தின விழா, சென்னை பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில்  நடந்தது.

விழாவில், தேசிய சிறுசேமிப்பு இன்ஸ்டிடியூட் மண்டல இயக்குனர் தாசரி வரவேற்றார். தி.நகர் தபால் துறை அலுவலக தலைமை அதிகாரியிடம், கடந்த 2007, 2008ம் ஆண்டிற் கான சிறந்த தபால் துறை அலுவலகத்திற்கான கேடயத்தை சிறுசேமிப்புத் துறை கமிஷனர் உமாசங்கர் வழங்கினார். சிறந்த சிறுசேமிப்பு முகவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமிதா தாகருக்கு விருது வழங்கப்பட்டது.

விழாவில், சென்னை மண்டல தலைமை தபால் துறை தலைவர் ராமானுஜம் பேசியதாவது:தபால் நிலையங்களில் தனித்தனியாக பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள், இனி ஒரே இடத்தில் கிடைக்க வசதிகள் கொண்டுவரப்படும். தபால் நிலையங்களிடையே இணைப்பு வசதி இன்னும் ஒரு ஆண்டுக்குள் கொண்டு வரப்படும். இந்த இணைப்பு வசதியை ஏற்படுத்துவதன் மூலம், ஒரு தபால் நிலையத்தில் பெறப்படும் சேவையை எந்த தபால் நிலையத்திலும் பெறலாம்.இவ்வாறு ராமானுஜம் பேசினார்.

சிறுசேமிப்புத் துறை கமிஷனர் உமாசங்கர் பேசியதாவது:பணி ஓய்வு பெறுபவர்களுக்கான மாதாந்திர வட்டி வருவாய் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், தொடர் வைப்பு திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறுசேமிப்புத்துறை திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரப் படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

அப்படங்களை பொதுமக்களிடம், 'டிவி' திரைகளில் காட்டுவதன் மூலம் சேமிப்பு திட்டங்களில் சேரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சேமிப்பு துறைக்கு லாபத்தையும் ஈட்டித் தரும்.இவ்வாறு உமாசங்கர் பேசினார்.விழாவில், ராஜாஜி பவன் பெண் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் மஞ்சுளா இனியன், செயலர் மாலதி மற்றும் பெண் முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். லோகநாதன் நன்றி கூறினார்.
Source : Dinamalar Dt. 16.04.10.

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane