பெங்களூரு: இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டுபோவதை தடுக்க, "ஆன்டி தெப்ட் இ மொபைலசர்' என்ற புதிய தொழில்நுட்பம் நாட்டில் முதல் முறையாக பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில், இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டு போவதாக போலீசார் பதிவேடுகளில் இருந்து தெரியவருகிறது. கடந்தாண்டு மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மாயமாகி விட்டதாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் பதிவேடுகளில் உள்ளது. இதை தடுக்க போலீசார் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலனளிக்காமல் போனது மட்டுமல்லாமல், இவ்வகை திருட்டுக்கள் போலீசாருக்கு பெரிய தலைவலியை உருவாக்கின.
இந்நிலையில், வயர்லெஸ் செக்யூரிட்டி அண்டு டிராக்கிங் சொல்யூஷன்ஸ் என்ற "ஐ டிரான்ஸ்' தனியார் நிறுவனம் நாட்டில் முதல் முறையாக, இரு சக்கர வாகனத் திருட்டை தடுக்க, "ஆன்டி தெப்ட் இ மொபைலசர்' என்ற புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இதன்படி, டி கோப் பைக் செக்யூரிட்டி ஆன் மொபைல் (டி.பி.எம்.) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இரு சக்கர வாகன திருட்டை தடுக்க முடியும். இப்புதிய தொழில்நுட்பத்தை பெங்களூருவில், வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தை, பெங்களூரு நகர போலீசார் வரவேற்றுள்ளனர். இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரது மொபைல் போனுடன் தொடர்புடைய சிம் கார்டு ஒன்று அவரது வாகனத்தில் பொருத்தப்படும். இந்த சிம் கார்டு செயல்பாடு, மொபைல்போன் வைத்திருப்பவரது கட்டுப்பாட்டில் செயல்படும். அவரது இரு சக்கர வாகனத்தை அவரை தவிர வேறு யாராவது இயக்க முற்பட்டால், உரிமையாளருக்கு எச்சரிக்கை தகவல் வரும். தொடர்ந்து குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வரத்தொடங்கும். திருடப்பட்ட இரு சக்கர வாகனம் எங்கு சென்றுகொண்டிருக்கிறது போன்ற தகவல்கள் அவரது மொபைல்போனுக்கு வந்துகொண்டே இருக்கும். இதை வைத்து போலீசாரின் உதவியுடன் அடுத்த சில நிமிடங்களில் இரு சக்கரவாகனத்தை கண்டுபிடித்து விட முடியும்.
இப்புதிய தொழில்நுட்பத்தை நேற்று முன்தினம் பெங்களூருவில் நகர போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், ஐ டிரான்ஸ் நிறுவன முதன்மை செயல் அலுவலர் மல்லேஷ் ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர். இதன் விலை நான்கு ஆயிரத்து 890 ரூபாய். இந்த தொழில்நுட்பத்தை பிற மொபைல்சேவை நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும். நாட்டில் இவ்வாண்டு, 20 ஆயிரம் யூனிட்டுக்களை விற்பனை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, www.tcop.co.in என்ற வலைதளத்தில் தொடர்பு கொண்டு அறியலாம்
Source : Dinamalar Dt. 01.06.12
No comments:
Post a Comment