Friday, September 23, 2011

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை ரத்து: பொதுமக்கள் அதிருப்தி


சென்னை:தபால் நிலையங்களில் வழங்கப்பட்டு வந்த பாஸ்போர்ட் சேவை, இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இம்முடிவுக்கு, பொதுமக்கள் மற்றும் தபால் துறை ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.



பாஸ்போர்ட் விண்ணப்பங்களை தபால் நிலையங்களில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அங்கேயே செலுத்தும் வசதி நேற்று வரை இருந்தது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில், 50க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில் இருந்து வந்த இந்த வசதி, கம்ப்யூட்டர், "இன்டர்நெட்' பரிச்சயம் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. மேலும் இச்சேவையில், "ஆன்-லைனில்' பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து விட்டு, குறிப்பிட்ட தேதியில் ஆவணங்கள் சரிபார்ப்புக்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சென்று, நீண்ட வரிசையில் நாள் முழுவதும் தவம் இருக்க வேண்டியதில்லை. ஒரு பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு 20 ரூபாய், அதற்கான ஆவணங்கள் சரிபார்ப்புக்கு, ஒரு விண்ணப்பத்திற்கு குறிப்பிட்ட அளவு சேவை கட்டணம் என, மத்திய வெளியுறவு அமைச்சகம் மூலம் தபால் துறைக்கும், ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வருவாய் வந்து கொண்டிருந்தது.

தற்போது, தனியார் பங்களிப்புடன் சென்னை அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக, தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் அமோக வரவேற்பும், தபால் துறைக்கு வருவாயும் தந்து வந்த இச்சேவை, ரத்து செய்யப்பட்டது குறித்து, பொதுமக்கள் மற்றும் தபால் துறை அலுவலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை மத்திய தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் கூறியதாவது: எங்கள் கோட்டத்தில், தி.நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை வழங்கப்பட்டு வந்தது. இம்மூன்று தபால் நிலையங்களிலும், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, மொத்தம் 62 ஆயிரத்து 140 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 57 ஆயிரம் விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இச்சேவை ரத்து செய்யப்பட்டது குறித்து, வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். தற்போது, "விண்ணப்பதாரரின் விருப்பத்தின் பெயரில், "ஆன்-லைனில்' பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் பணியை மட்டும், கணினிமயமாக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்கள் மேற்கொள்ளலாம்' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு 100 ரூபாய் சேவை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு வெங்கட்ராமன் கூறினார்.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் கூறும் போது, ""புதிய பாஸ்போர்ட் சேவை மையங்களில், கைவிரல் ரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல் போன்ற நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் காரணமாகத் தான், தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை ரத்து செய்யப்படுகிறது. வருவாய் இழப்பை சரி செய்து கொள்ள, "ஆன்-லைனில்' விண்ணப்பங்களை பெறவும், விண்ணப்பங்கள் குறித்த தற்போதைய நிலவரம் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கவும், தபால் துறைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது,'' என்றார்.-நமது சிறப்பு நிருபர்-

Source : Dinamalar Dt. 22.09.11

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane