ரூ.432 கோடி மதிப்பில் அஞ்சலக காப்பீடு பாலிசிகள் விற்பனை
பதிவு செய்த நாள் : மே 05,2011,00:57 IST
மதுரை : ""கிராமப்புற அஞ்சலக காப்பீட்டு திட்டத்தில் கடந்தாண்டு ரூ.432 கோடி மதிப்பில் கூடுதலாக ஒரு லட்சம் பாலிசிகள் விற்பனையானது,'' என, தபால் துறை தென் மண்டல தலைவர் செல்வக்குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: அஞ்சலக காப்பீட்டு திட்டத்தில் மட்டும் கடந்தாண்டை விட இந்தாண்டு 15 சதவீதம் வரை கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டது. ஆறு கோட்டங்களில் அனைத்து தபால் நிலையங்களிலும் எலக்ட்ரானிக் மணியார்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. முக்கிய தபால் நிலையங்களில் மின்கட்டணம் வசூலிக்க வழி செய்யப்பட்டுள்ளது. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் நவீனமயமாக்கம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.ஆறு கோடி செலவிடப்பட்டது. தபால்களை மறுநாளே பட்டுவாடா செய்ய வசதியாக திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே இரு மார்க்கத்திலும் தலா ஒரு வேன் இயக்கப்படுகிறது. இதன் தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் அனுப்பப்படும் தபால்கள், மறுநாள் சம்பந்தப்பட்ட முகவரியில் பட்டுவாடா செய்யப்படும். மதுரையில் உத்தங்குடி, விசாலாட்சிநகர், விளாங்குடியில் புதிய கிளை அலுவலங்கள் திறக்கப்பட்டுள்ளன. முப்பது மாதங்களில் மட்டும் தென் மண்டல தபால் நிலையங்களில் 105 கிலோ எடையிலான தங்க நாணயங்கள் விற்பனையாகின, என்றார். நேற்று ஐம்பது, பத்து கிராம் எடையிலான நாணயங்களை அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் தபால் துறை இயக்குனர் ஜெய்சங்கர், கண்காணிப்பாளர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment