சென்னை : ""பொது மக்களுக்கான ஓய்வூதிய திட்டம், கணினிமயமாக்கப்பட்ட அனைத்து தபால் நிலையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும்,'' என தலைமை தபால் துறைத் தலைவர் சாந்தி நாயர் கூறினார். இது குறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசு, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் புதிதாக சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே அமலில் உள்ளது. பொதுமக்களுக்கான திட்டம், கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இப்போது, அதற்கான முழுமையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தவிர்த்து, 18 முதல் 55 வயதுடைய இந்தியர்கள் அனைவரும் இத் திட்டத்தில் சேரலாம். இரண்டு வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் வகையில், குறைந்தபட்சம் மாதம் 500 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் இணைபவர்களுக்கு, 60 வயது கழித்து ஓய்வூதியம் வழங்கப்படும். இவர்கள் செலுத்தும் தொகை, அரசு தேர்வு செய்துள்ள ஆறு வகையான நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்யப்படும். இரண்டாவது வகையில், குறைந்தபட்சம் மாதம் 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கும் முதல் வகையில் கூறப்பட்ட அனைத்து அம்சங்களும் பொருந்தும். குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகளாவது பணம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில், நாம் எப்போது விரும்பினாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த இரண்டு ஓய்வூதிய திட்டங்களும், தமிழகத்தில் 94 தலைமை தபால் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது படிப்படியாக கணினி மயமாக்கப்பட்ட அனைத்து தபால் அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். புதிய ஓய்வூதிய திட்டங்களில் சேருவோரின் வயது, செலுத்தும் தொகைக்கு ஏற்ப அவர்கள் பெறும் ஓய்வூதியத் தொகை மாறுபடும். வெளிநாட்டில் பயணம் மேற்கொள்பவர்கள், படிப்பவர்கள், மருத்துவம் செய்து கொள்வோரின் வசதிக்காக, "எம்.ஓ., விதேஷ்' என்ற மணியார்டர் வசதி உள்ளது. இதன்படி, 5,000 ஆயிரம் அமெரிக்க டாலர் முதல், ஒரு லட்சம் அமெரிக்க டாலர் வரை அனுப்ப முடியும். இந்த தொகை, 5 நாட்களுக்குள் அவர்களுக்கு கிடைக்கும். "உடனடி மணியார்டர்' என்ற புதிய திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி, பணம் செலுத்திய அடுத்த 10 நிமிடத்திற்குள் பணத்தை பெற முடியும். இத்திட்டம் தமிழகத்தில், 341 தபால் அலுவலகங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில், குறைந்த பட்சம் 1,000 ரூபாய் முதல், அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் அனுப்ப முடியும். அரசு ஊழியர்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் தனியே இன் சூரன்ஸ் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதை அனைத்து தரப்பினருக்கும் விரிவுபடுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சாந்தி நாயர் கூறினார். தபால் துறை தலைவர்கள் ராமானுஜம், மூர்த்தி, ராமமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். Courtesy : Dinamalar. |
No comments:
Post a Comment