வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள பணம் நாளை முதல் தினமும் வட்டி அமல் :
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில், வங்கிகளில், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணத்திற்கு, ஏப்ரல் 1ம் தேதி (நாளை) முதல் தினசரி அடிப்படையில் வட்டி வீதம் கணக்கிடப்பட உள்ளது. ஒருவரின் சேமிப்புக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் பத்தாம் நாள் முதல் அந்த மாதத்தின் கடைசி நாள் வரை இருக்கும் குறைந்தபட்ச தொகைக்கு வட்டி கணக்கிடப்படும் நடைமுறை இதுவரை பின்பற்றப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ், கடந்தாண்டு ஏப்ரல் 21ம் தேதி வெளியிட்ட ஆண்டு ரிசர்வ் வங்கி கொள்கை திட்டத்தில், 'சேமிப்பு கணக்கிற்கான வட்டி வீதம், தினசரி அடிப்படையில் கணக்கிட வேண்டும்' என, பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், சேமிப்புக் கணக்கிற்கான வட்டியை குறைக்குமாறு, வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வருகின்றன. ஏனென்றால், தினசரி வட்டி வீதம் கணக்கிட்டால், தங்களின் கையிருப்பு குறையும் என, வங்கிகள் கருதுகின்றன. தற்போது, சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கு ஆண்டுக்கு 3.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், 'மாற்றியமைக்கப்பட்ட வட்டி வீதத்தின் படி, பெரியளவு தொகையுடன், அடிக்கடி பண பரிவர்த்தனைகள் செய்பவர்களுக்கு, தினசரி கணக்கில் உள்ள பணத்தின் அடிப்படையில் அதிக பயன் கிடைக்கும். எனினும், பணப்பரிவர்த்தனைகளை பொறுத்து, டிபாசிட்தாரர்கள் 1.5 சதவீதம் முதல் 2.8 சதவீதம் வரையிலான வட்டி இனி கூடுதலாகப் பெறலாம் என, கணக்கிடப்பட்டுள்ளது' என்றனர். இது வரை சேமிப்புக் கணக்கில் உள்ள பணம் அதிகளவில் தூங்கிக் கொண்டிருந்த நிலைமாறி, ஏதோ சிறிதளவு பணம் வட்டியாக வரும் வாய்ப்பை இந்த நடைமுறை ஏற்படுத்தும். ஆனால் இதை வங்கிகள் அமல்படுத்த முழுவதும் கம்ப்யூட்டர் மூலமான கணக்கு பரிவர்த்தனை வசதி தேவை. அதைப் பொறுத்து ஒவ்வொரு வங்கியும் தன் கிளைகளுக்கு இந்த நடைமுறையைக் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.
Source : Dinamalar.
No comments:
Post a Comment