Friday, November 16, 2012

மொபைல் பண பரிமாற்ற சேவை 4 மாநிலங்களில் துவங்கியது

புதுடில்லி: 
மொபைல்போன் மூலமான பணம் அனுப்பும் சேவையை டில்லியில், மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர், கபில் சிபல் துவக்கிவைத்தார்.தபால் அலுவலகத்திலிருந்து மணியார்டர் மற்றும் தந்தி மணியார்டர் மூலம் பணம் அனுப்பும் வசதி உள்ளது. தொலை தொடர்பு வசதிகளால், வங்கிகளின் சேவையும் விரிவடைந்துள்ளது. இதனால், மணியார்டர் அனுப்புவது குறைந்துள்ளது.இந்நிலையில், மொபைல்போன் சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அடிப்படையாக வைத்து, மொபைல் பண பரிமாற்ற சேவையை துவக்க போவதாக தபால் துறை அறிவித்தது.தபால் துறையும், பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் இணைந்து, மொபைல் போன் வழியாக பணம் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன்படி, இத்திட்டம், டில்லி, பீகர், பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டும் அமலுக்கு வரும் வகையில் நேற்று துவக்கப்பட்டுள்ளது.இதன்படி, பணம் அனுப்பும் நபர், தபால் அலுவலகத்திற்கு சென்று, விண்ணப்பத்தில் அனுப்பும் தொகை, பணத்தை பெறுபவரின் மொபைல் போன் எண் , பெயர் ஆகியவற்றை பூர்த்தி செய்து, அவற்றுடன் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.இதன்பின், பண பரிமாற்றத்திற்கான அடையாள எண் , பணத்தை பெறும் நபரின் மொபைல் போனுக்கு, எஸ். எம்.எஸ்., செய்யப்படும். அவர், அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று, அந்த அடையாள எண்ணை காண்பித்து, பணத்தை பெற்று கொள்ளலாம். பணத்தை டிபாசிட் செய்த நாளிலிருந்து, ஏழு நாட்களுக்குள் பெற்று கொள்ளலாம். இச்சேவையின் கீழ், 1,500 ரூபாய் வரை அனுப்புவதற்கு கட்டணமாக, 45 ரூபாய் செலுத்த வேண்டும். 5,000 ரூபாய் வரை அனுப்புவதற்கு, 79 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 10 ஆயிரம் ரூபாய் வரை அனுப்புவதற்கு, 112 ரூபாய் செலுத்த வேண்டும்.டில்லியில், இத் திட்டத்தை, நேற்று துவக்கிவைத்த மத்திய தொலை தொடர்பு அமைச்சர், கபில் சிபல் கூறியதாவது:இந்த சேவைக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க, இரு துறையையும் கேட்டு கொள்கிறேன். குறிப்பாக, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், இந்த சேவையை பயன்படுத்தும் போது அவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. இவ்வாறு, கபில்சிபல் கூறினார்.
Source : Dinamalar Dt. 16.11.12

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane