சுட்டெரிக்கும் அக்னி வெயிலுக்கு இதம் தரும் வகையில், வெப்பத்தைத் தணிக்கும், 'வெட்டி வேர் தட்டிகள்' விற்பனை சென்னையில் அமோகமாக நடந்து வருகிறது.தமிழகத்தில் கோடையில் தாக்கம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அக்னி வெயில் நூறு டிகிரியைத் தாண்டி மக்களை வறுத்தெடுத்து வருகிறது. வெளியில் தான் தலை காட்ட முடியவில்லை என்றால், வெயிலுக்கு பயந்து வீடுகளில் முடங்கிக் கிடப்போரின் நிலையோ அதை விட பரிதாபம்.
மின் விசிறிகள் சுழன்றாலும், அனல் காற்றைத்தான் கக்குகின்றன. இதனால், வீட்டிற்குள்ளும் கோடையின் தாக்கம் விட்டு வைக்கவில்லை.வீடுகளில் குளிர்சாதன இயந்திரங்களை வைத்துள்ளோர் கோடையில் சற்று நிம்மதியாக இருந்தாலும், நடுத்தர மக்கள் அப்படி இருக்க முடிவதில்லை. அத்தகையோர் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க கதவு, ஜன்னல் திரைச் சீலைகளில் கவனம் செலுத்துகின்றனர். அவர்களுக்காகவே, தற்போது 'வெட்டிவேர்' தட்டிகள் விற்பனைக்கு வந்துள்ளன.
வெப்பத்தை தணித்து, குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை வெட்டி வேருக்கு உண்டு. இதனால்தான், தலையில் தேய்க்கும் எண்ணெயில், வெட்டிவேர் போட்டு வைக்கும் பழக்கம் நம்மூர் பெண்களிடம் இருந்து வருகிறது. அதனடிப்படையில்தான் வெட்டிவேர் தட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.மூங்கிலைக் கொண்டு பல விதமான தயாரிக்கப்படும் தட்டிகள், சதுர அடி 25 முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது.
வெட்டி வேர் தட்டிகள் சதுர அடி 50 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சென்னை வால்டாக்ஸ் சாலையில் தட்டி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோர், தற்போது, வெட்டி வேர் தட்டிகள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தட்டி தயாரித்து வரும் வாலிபர் குரு கூறும்போது,கோடை காலத்தில் கதவு, ஜன்னலோரத்தில் வெட்டி வேர் தட்டிகளை மாட்டிவிட்டு, வெட்டி வேரில் தண்ணீர் தெளித்தால் போதும். அனல் காற்று உள்ளே வராது; வெப்பம் தணிந்து அறைகள் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பும் வராது'' என்றார்.கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க நடுத்தர மக்கள் வெட்டிவேர் தட்டிகளை ஆர்வமுடன் வாங்குகின்றனர். அக்னியைத் தணிக்கும் வெட்டிவேர் தட்டிகள் ஏழைகளின், மலிவு விலை 'ஏசி' என்றே சொல்லலாம்.
source : Dinamalar.
No comments:
Post a Comment